இப்பங்களிப்பு பொருளாதாரரீதியாக மட்டுமின்றி, தொழில்நுட்பம், தாங்கள் சார்ந்த துறையின் அனுபவத்தையும் அறிவையும் பகிர்தல், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் ஏற்படுத்தல், தொழில் முனைவோருக்கான பயிற்சி என எந்த வகையிலும் அமையலாம். ஒவ்வொரு பங்களிப்பும் இத்துறை மூலம் மிகவும் வெளிப்படை தன்மையோடும் அரசின் முழுமையான வழிகாட்டுதலுடனும் அதிவிரைவாக செயல்படுத்தப்படும்.
இவ்வாறு பங்களிப்பு மேற்கொள்ளும் தனிநபர், அமைப்பு அல்லது நிறுவனத்திற்கு தேவையான அனைத்து ஊக்கமும், உதவியும் இந்த அரசால் வழங்கப்படும்.
மேலும் பெறப்படும் பங்களிப்புகள் நேரடியாக அரசின் வங்கி கணக்கில் செலுத்தி உரிய சான்றிதழ், வரிச்சலுகை மற்றும் ஆவணங்கள் வழங்கப்படும்.
இங்ஙனம் பெறப்பட்ட நிதி மூலம் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சி பணிகள் குறித்து பங்களித்தவர்களுக்கு முழுமையான தகவல்களும் வழங்கப்படும். கல்வி, நல்வாழ்வு மற்றும் சுகாதாரம், விவசாயம், குடிநீர், பாசனம், சாலை வசதி, போக்குவரத்து, பெண்கள் பாதுகாப்பு, தமிழ் மொழி வளர்ச்சி, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு, தொழிற்சாலை, தொழில்நுட்பம் என எந்த துறையிலும் பங்களிப்பை வழங்க வரவேற்கப்படுவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு பெறப்பட்ட பங்களிப்புகள் குறித்த பட்டியல் தொகுக்கப்பட்டு ஆண்டு அறிக்கையாக வெளியிடப்பட்டு, சிறந்த பங்களிப்பினை வழங்கியவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12 ஆம் நாள் கொண்டாடப்படும் “அயலகத் தமிழர் தினத்தில்” அரசின் சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்படும்.