பழவேற்காடு முதல் பத்தாவியா வரை
1622 ஆம் வருடம் மே மாதம் 8 ஆம் திகதி, பத்தாவியா வில் இருந்து (இன்றைய இந்தோனேசியாவின் ஜகார்த்தா) டச்சு கிழக்கு இந்திய கம்பெனியின் கவர்னர் ஜெனரல் ஆக இருந்த ஜாண் பியேட்டேர்சூன் கோன் (JAN PETERZOON COEN ), இந்தியாவில் சோழ மண்டல கடற்கரையை ( கோரமண்டல்) ஆக்கிரமித்து ஆலைகளும் காலனி குடியிருப்புகளும் கோட்டை கொத்தளங்களுடன் தமிழத்தின் புலிகாட் (பழவேற்காடு) டிலும் இன்றைய ஆந்திராவின் மசூலிப்பட்டினத்திலும் வாழ்ந்து வந்த டச்சு அதிகாரிகளுக்குக் காட்டமாக கீழ் வரும் கடிதத்தை அனுப்பி இருந்தான் .
கோரமண்டலுக்கு ‘பத்தாவியா ‘வில் இருந்து இளம் பருவத்து ஆண்களையும் பெண்களையும் அனுப்பி வைக்க கப்பல் அனுப்பப் பட்டது. குறைந்த பட்சம் 1,000 தலைகளாவது எதிர் பார்த்து அனுப்பப் பட்ட கப்பலில் வேறும் 124 பேரை மட்டுமே அனுப்பி இருக்கிறீர்கள். கிழக்கு இந்திய கம்பெனியின் கட்டளையை இலகுவாக எடுத்துக்கொண்ட உங்களது இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, வெட்கக் கேடானது!
கீழ்த்திசை நாடுகளுக்குக் கடற் பயணம் மேற்கொண்ட ஐரோப்பியர்களில், ஸ்பானியர், போர்த்துகீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர் என இங்கிருக்கும் செல்வங்களை வாணிப பொருட்களை அள்ளிச் செல்வதில் போட்டி நிலவிய காலம் கி.பி. 1,400 க்கு பிந்தைய காலம். புதிய கண்டங்களைக் கண்டு வர அரசுகளே செலவழித்து கப்பல் கப்பலாக மாலுமிகளையும் வணிகர்களையும் அனுப்பி வைத்தன. வாணிபப் பயிர்களான புகையிலை, வாசனைத் திரவியங்கள், மசாலாப் பொருட்கள், பருத்தி, ஆடைகள், மயிலிறகு, பீங்கான் என்று வாணிபப் பட்டியல் நீண்ட போதிலும், அடிமைகள் வணிகம், மாலுமிகளுக்கும், ஐரோப்பிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக வருகின்ற பிரபுக்களின் உறவுகளுக்கும் பணம் காய்க்கும் மரமாக விளங்கியது.
கி.பி.1596 ஆம் ஆண்டுக்கும் கி.பி 1829 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டுமே டச்சுக்காரர்கள் அடிமைகளாக அட்லாண்டிக் பெருங்கடலில் கடத்திய / கொண்டு சேர்த்த/வணிகம் செய்த மனிதர்களின் எண்ணிக்கை அரை மில்லியனுக்கும் மேல். கரீபியன் பகுதியில் அள்ள அள்ள , இல்லை, மந்தைகளாக அனுப்ப அனுப்பக் குறையாத மனித வளம் நிறைய இருந்து ஹாலந்து நாட்டின் செல்வத்தில் சேர்ந்து கொண்டே இருந்தது. டச்சு மேற்கிந்தியக் கம்பெனியின் (Dutch West India Company-GWC) அடிமை வாணிபம் ஆரம்ப வருடங்களில் அவர்கள் நாட்டின் செழிப்பை வளப்படுத்தி உலகப் பொருளாதார சக்தியாக மாற்றி விட்டு இருந்தது
இந்தக் கால கட்டத்தில் இந்தோனேசியாவின் பத்தாவியா, எவ்வளவு அடிமைகளை சோழ மண்டலக் கரைப் பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்ய இயலுமோ அந்த அளவுக்கு இறக்கியாக வேண்டும் என்ற வெறியோடு களத்தில் நின்று இருந்தது. வில்லியம் மெத்வால்ட் (WILLIAM METHWOLD) எனும் ஆங்கிலேயே வியாபாரி டச்சு, பிரஞ்சு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர். 17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியில் மொழி பெயர்ப்பாளராக பணி புரிந்தார். Relations of the Kingdome of Golchonda and other neighbouring Nations within the Gulfe of Bengal &co., என்ற இவரது பதிவுகள் அன்றைய பழவேற்காடு (புலிகாட்), மசூலிப்பட்டணம் பகுதிகளில் தமிழர் மற்றும் பிற மாநிலத்தவர் பண்டங்களைப் போல அடிமையாக வாங்கப் படுவதை குறித்துச் சொல்கின்றன.
விபரம் தெரிந்த இந்திய வியாபாரிகள் நாட்டுப்பகுதிகளில் இருந்து அரிசி மற்றும் தானியங்களைத் தலைச் சுமையாகக் கொண்டு வருகின்றனர். கிராமங்களிலும், மற்ற புற நகர்ப் பகுதிகளிலும் பண்ட மாற்று முறை போல குழந்தைகளை தாம் கொண்டு வரும் தானியங்களுக்கு மாற்றிக் கொள்கின்றனர். கிட்டத்தட்ட ஒரு குழந்தையின் விலை அன்றைய மதிப்பில் மூன்று அல்லது நான்கு ஷில்லிங் (Schilling ). இப்படி நான்கு ஷில்லிங்குகளுக்கு வாங்கப்படும் ஒரு குழந்தை மசூலிப்பட்டணம் கடற்கரையில் நாற்பது ஷில்லிங்கிற்கு விற்கப்பட்டன. பத்து மடங்கு இலாபத்தில் வியாபாரிகள் மகிழ்ந்து இளம் சிறார் விற்பனையில் கொழுத்து வளர்ந்தனர்.
பழவேற்காடு பகுதியிலேயே 1622 ஆம் ஆண்டு வாழ்ந்த இன்னொரு ஆங்கிலேய வணிகர், தாமஸ் மில்ஸ் (THOMAS MILLS) குறிப்பிடுகிறார்,
'டச்சு அதிகாரிகளின் ஆணை, எவ்வளவு அதிகம் அடிமை ஆட்கள் அனுப்பி வைக்க முடியுமோ அவ்வளவு அனுப்ப முயற்சி செய்யுங்கள். எப்படி இருந்த போதும் இந்த எண்ணிக்கை, 4,000 முதல் 5,000 வரை இருக்க வேண்டும்'.
பழவேற்காடு துறை முகத்தில் இருந்து பத்தாவியாவுக்கு 'நியூஸிலாந்து' (NEWZELAND) என்னும் கப்பல் 460 அடிமைகளுடன் புறப்பட்டது. அடுத்த துறைமுகமான 'தேங்காய்ப்பட்டணத்தில்' (TEGNAPATNAM) இன்னுமொரு 650 அடிமைகள் ஏற்றப்பட்டனர்.
இவ்வளவு துல்லியமாக தாமஸ் மில்ஸ் கணக்கு சொல்வதற்கும் ஒரு உள்நோக்கம் இருக்கிறது. அந்த கால கட்டத்தில் ஆங்கிலேயர்களான, தாமஸ் மில்ஸ் மற்றும் ஜான் மில்வார்ட் (JOHN MILWARD ) இவர்களின் ஆலைகளுக்கு வேலை ஆட்கள் பஞ்சம். அதனால் தான் இந்த இருவரும் சூலை மாதம் 1622 ஆம் வருடம் டச்சுக் காரர்களின் கொடுமைகளாக இந்த பதிவுகளை இட்டு வைத்திருக்கிறார்கள்.
அமெரிக்க சரித்திர ஆசிரியரான ரிச்சர்ட் பி அலென் (RICHARD B ALLEN )தனது புத்தகமான 'இந்தியப் பெருங்கடலில் அடிமை வணிகம் ,1500-1850 (European Slave Trading in the Indian Ocean, 1500-1850,) என்ற புத்தகத்தில் ஆட்டு மந்தைகளை போல மனிதர்கள் அடிமைகளாக அடைத்துச் சென்ற கொடுமைகளை விவரிக்கிறார்.
புலிக்காட் பகுதிகளில் டச்சுக்காரர்களால் வாங்கப்படும் அடிமைகள் பெரும்பாலும் நெடுஞ்சாலையைகளில் இருந்து திருடப்பட்டவர்களாகவோ, பெற்றோரிடமிருந்தும் சுற்றத்தாரிடம் இருந்தும் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டவர்களாகவோ இருந்தனர். கீழ்மட்ட பொது மக்களிடம் எப்போதும் தனியாக மாட்டிக்கொண்டால் கடத்தப்பட்டு விடுவோம் என்ற பயம் இருந்தது. உள்ளூர்ச் சந்தைக்கு தகுந்த பாதுகாப்பு இல்லாமல் வருவதற்கும் துணிவற்றவர்களாவே இருந்தனர்.
Art & Architecture Research Development & Education [AARDE] Foundation, இந்தியாவில் சென்னை நகரில் இயங்கி வருகிறது. இதன் நிறுவுனர் பேராசிரியர் சேவியர் பெனடிக்ட் (Professor Xavier Benedict), பழவேற்காடு நீலக்கடற்கரைப் பாரம்பரியத்தை பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. பழவேற்காட்டின் பாரம்பரியத்தை ஆராய்ந்து வரும் பெனடிக்ட் அவர்கள் பல சரித்திர நிகழ்வுகளை வெளிக் கொணர்ந்து இருக்கிறார். அவரது ஆய்வுகளின் படி அடிமைகளாக அனுப்பப்பட்டவர்கள் சென்னைக்கும் வெகு தொலைவில் இருந்த நாட்டுப்புறங்களில் இருந்து முகவர்களால் தவறான வழி முறைகளில் அழைத்து வரப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இந்த முகவர்கள் (BROKERS) ஆங்கிலயக் கம்பெனிகளில் பணி புரிந்தாலும் காசுக்காக டச்சு கம்பெனிகளுக்கும் ஆள் பிடித்துக் கொடுத்து காசு பார்த்து இருக்கிறார்கள்.
ஆங்கிலேயக் கம்பெனி அதிகாரிகளுக்குத் தெரிந்தால் தண்டம் கட்ட வேண்டிய சூழலும் உண்டு. வெங்கட் என்ற சென்னையைச் சேர்ந்த ஆங்கிலேயக் கம்பெனி அலுவலகப் பணியாளர், கடத்தப்பட்ட நான்கு சிறார்கள் பழவேற்காட்டில் டச்சு தரகர்களுக்கு விற்பதற்கு வசதி செய்து கொடுத்து அதற்காக கையூட்டுப் பெற்றதற்காக 16 பகோடாக்கள் அபராதம் விதிக்கப்பட்டார், ஆங்கிலேய அதிர்க்காரிகளால்..
தொடர்ந்து அடிமைகளை அனுப்பி வையுங்கள் பத்தாவியாவுக்கு என்று பழவேற்காடு கோட்டைப் பகுதி அதிகாரிகளுக்கு வரும் ஆணைகள் எரிச்சலூட்டுவதாக இருந்தன. 16 வயது முதல் 22 வயது வரை உள்ள திடமான ஆட்கள் மட்டுமே வேண்டும். நிறையவும் வேண்டும் . ஆலை நிர்வாகம் செய்ய வேண்டி வந்த டச்சு அதிகாரிகள் ஆள் பிடிக்கும் வேலை செய்வது சிரமம் தான் வந்த இடத்தில்.
ஏனென்றால் ஏதோ அடித்தோம், பிடித்தோம், அனுப்பினோம், தலைக்கு இவ்வளவு காசு கிடைத்தது.. பகிர்ந்து கொண்டோம் என்று இருக்க முடியாது . ஆள் பிடிப்பதில் அத்தனை நிபந்தனைகள்:
· அனுப்பப்படும் அடிமைகள் திட காத்திரமாக இருக்க வேண்டும்
· இளம் வயதினர் மட்டுமே அனுப்பப்பட வேண்டும். ( அப்போதுதான் சாவதற்கு கொஞ்சம் அதிகம் வருடங்கள் ஆகும் )
· ஆண்கள் 18 வயதுக்கு மேல் 30க்குக் கீழ் இருக்க வேண்டும் .
· மொத்த சரக்கு/ வணிகப்பொருட்களின் (CARGO / MERCHANDISE ?) மொத்த எண்ணிக்கையின் பட்டியல் (PACKING LIST ) இப்படி இருக்க வேண்டும்.
o 65% = ஆண்கள்
o 30% = பெண்கள்
o 5% = சிறார்
ஆலென் (Allen ) மேலும் தொடர்கிறார்.....
முனைவர் ஓ டிஜிக் என்பாரது ஆய்வுகளின் படி 1621 க்கும் 1665க்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும் பழவேற்காடு துறையில் இருந்து டச்சுக்காரர்களின் 131 கப்பல்கள் 38,441 அடிமைகளை ஏற்றி வந்ததாக பதிவுகள் இருக்கின்றன . அடிமைகள் அனைவரும் தமிழர் என்று சொல்ல முடியாது. பர்மாவில் இருந்த அரக்கான் இனத்தவர், பெங்கால் பகுதியில் சண்டையிட்டு அங்கு பிடிபட்ட 'பெங்காலி' களை அடிமைகளாக விற்றும் காசு பார்த்து இருக்கிறார்கள். இந்த பெங்காலி அடிமைகளையும் பழவேற்காடு துறைமுகம் தான் கப்பலேற்றி இருக்கிறது. 1624 ஆம் ஆண்டு மட்டுமே 10,000 அடிமைகள் பழவேற்காட்டுக்கும், இந்தோனேசியாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இத்தனை தலைகளும் உருப்படியாக கரை சேர்ந்து விடுவார்களா என்றால், அதுதான் இல்லை. மனிதாபிமானமற்ற சூழல்கள்... கடல் பயணங்களில்... உதாரணமாக, வர்டே (VARDE) மற்றும் மேடென்பிளிக் (MEDENBLICK ) என்ற இரண்டு டச்சுக் கப்பல்கள் 400 அடிமைகளை ஏற்றி வந்தன . பத்தாவியா கரையில் இறங்கியவர்கள் வெறும் 100 பேர் மட்டுமே..
இப்படி கடலிலே கரைந்து போன உயிர்களை பற்றிய கவலை பாத்தவிய ஜெனெரலுக்கு உண்டு. அவர்கள் இறந்து விட்டதை நினைத்து அல்ல. தேவையில்லாமல் அதிகம் செலவாகி விடுகிறதே என்றுதான். மிகவும் கோபத்துடன் மீண்டும் கடிதம் எழுதினான் ஜான் பீயிடெர்சூன் கோயின், பத்தாவியாவில் இருந்து... இப்படி பேருக்குத் தலைகளை அனுப்பதை முதலில் நிறுத்துங்கள். இளமையான கட்டுடல் கொண்ட திடகாத்திரமான ஆட்கள் கிடைக்க வில்லை என்றால் ஆட்களே அனுப்ப தேவை இல்லை... (சந்தையில் நல்ல மாடுகள் வாங்கினால் தானே உழவு வேலை நடக்கும் ?).
ஆட்கள் அதிகள் தேவைப்படும் உச்ச பருவத்தில் (PEAK SEASON) ஒரு அடிமையின் விலை 30 கில்டெர் (Dutch Currency Guilder) வரை (இன்றைய மதிப்பு இந்திய ரூபாய் 1,400) உயரும். சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரே பெரும்பாலும் அடிமைகள் ஆக்கப்பட்டார்கள் . சில உயர் சாதி அடிமைக் கதைகளும் உண்டு. தானாகவே விரும்பி அடிமைகள் ஆனவர்களும் இதில் அடக்கம். வறுமையும், பஞ்சத்தின் கோரமும் அடிமைகளின் விலையை இறங்க வைத்தன. மேலும் வரும்படி இல்லாத வறுமையான வாழ்க்கை மனிதர்களைத் தங்களைத் தாங்களே விற்றுக்கொள்ளும் நிலைக்குத் தள்ளி விட்டன.
அடிமைகளின் பங்கு ஒரு கட்டத்தில் தவிர்க்க இயலாத காரணி ஆக மாறியது. பல்வேறு பணிகளிலும் அடிமைகள் ஈடுபடுத்தப்பட்டனர். துணிகள் துவைக்க, கப்பல்/படகு இவற்றைப் பழுது நீக்க, விவசாயம் மற்றும் பணப்பயிர் தோட்டப்பணிகள் செய்ய (ESTATES) என்று எங்கும் நிறைத் தொழிலாளர்கள் ஆனார்கள் அடிமைகள். மதம் பரப்ப வந்த தேவ சபையினரும் (MISSIONARIES), தங்களது பல்லக்குத் தூக்கிகளாக அடிமைகளை வைத்துக் கொண்டனர். குறைவான விலையில் நிறைவாகக் கிடைத்த மனித வளம் அடிமைகள் என்ற பெயரில் சுரண்டப்பட்டது... அவர்கள் இரத்தமும் வியர்வையும் காட்டைக் காலனியாக்கி காலணிகளை வேரூன்ற வைத்தன.
இந்த டச்சுக்க்காரர்களின் அடிமை வாணிபம் 18ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து, 19 ஆம் நூற்றாண்டில் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது.. அதுவும் இந்தியாவை ஆண்டு வந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சட்டப் பூர்வமான நடவடிக்கையால் தான். ஆம் என்னதான் கொடுங்கோலர் என்ற போதிலும், ஆங்கிலேயர் தனது இராஜ்ஜியமான இந்தியாவில் இருந்து அடிமைகளாகத் தமது குடிமக்கள் மற்ற ஐரோப்பியருக்கு அடி வருடுவதில் உடன் பாடு இல்லை. இந்திய அடிமை சட்டம் 1843 (The Indian Slavery Act 1843) பாரதத்தில் நிறைவேற்றப்ப்பட்ட உடன் சட்டபூர்வமாக அடிமைகளை இறக்குமதி செய்யும் நிலை நின்று போனது. ஆயினும் கள்ளத்தனமாக ஆட்களை ஏற்றி வியாபாரம் செய்யும் வேலை அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்து கொண்டு தான் இருந்தது.
அடிமை வாணிகம் தடை செய்த பின்னர், மேற்கத்தியர் அதற்கு மாற்றாக ஒரு புறக்கடை வழிலைக் கண்டு பிடித்தனர். அதுதான் ஒப்பந்தக் கூலிகள். கூலிகள் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்த்து/ கை நாட்டு வாங்கி கொண்டு தேனாறும் பாலாறும் ஓடும் நாடுகளுக்கு வரப்போகிறீர்கள். தங்கம் கொட்டிக் கிடைக்கும் பூமியில் இருந்து கப்பல் நிறைய பொருள் கொண்டு வர போகும் கோடீஸ்வரர்கள் என்று கதை வசனம் எழுதி அப்பாவி பாமரர்களின் வயிற்றில் அடித்த வரலாறு என்றும் ரணமாக ஏழை மக்கள் நாடுகளில். தங்களுக்குள் அடி பிடி சண்டைகள் இருந்தாலும் , இந்த இங்கிலாந்து, டச்சு, போர்த்துகீசிய ஸ்பானியர்களுக்குள் ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்தும் , அதன் பிறகு இந்தியாவிலும் , சீனாவில் இருந்தும் இந்த கூலிகளை அடிமைகளாகத் தங்கள் தோட்டங்களுக்கு கொண்டு செல்வதில் ஒரே மாதிரியான ஒற்றுமை இருந்தது.
டச்சுக்காரர்கள் வட சுமத்ராவில் டிலி என்ற பகுதியில் புகையிலை பயிரிட்டார்கள். சுமத்திராவின் புகையிலை ஐரோப்பிய நாடுகளில் மிகப் பெரும் இலாபம் ஈட்டும் பணப் பயிராக விளங்கியது. சீனாவிலிருந்து வந்த கூலிகள் அதிக ஊதியம் கேட்டதோடு அடிக்கடி முதலாளிகளை மாற்றிக்கொண்டு இருந்தார்கள், கூலியாள் தேவைக்கு ஏற்றப்படி அவர்களது ஏஜெண்டுகள் வேலையாட்களின் கூலியை நிர்ணயம் செய்வது இந்த கொழுத்த வெள்ளை முதலைகளுக்கு மிகப்பெரும் தலைவலியாக இருந்தது. சீனர்கள் ஒரு பணியைச் செய்யும் போது தமக்கு என்ன கிடைக்கிறது என்பதை விட எதிராளிக்கு என்ன கிடைக்கிறது என்று தான் பார்ப்பார்கள்.. அது தான் அவர்களது முன்னேற்றத்துக்கான திறவு கோல். நாம் இன்னும் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று சொல்லிக்கொண்டு பணிவோடு அடிமைகளாத்தான் இருக்கிறோம். இந்த நிலையில் தான் ஆறு மருந்தாக இந்தியர் ஒப்பந்தக் கூலிகளாக பிரிட்டிஷ் இந்தியா காலனி நாடுகளுக்கு கரும்புத்தோட்டங்களுக்கு சகாய விலை ஒப்பந்தத்தில் கிடைத்துக் கொண்டு இருந்தனர்.
அந்த வகையிலே ஆள் பிடிக்கும் ஏஜெண்டுகள் பிரிட்டிஷ் இந்தியாவின் மதராஸ் ராஜதானியில் இருந்து தமிழர், தெலுங்கர்களையும், பெங்கால் ராஜதானியில் இருந்து வங்காளிகள், பஞ்சாபிகள் என ஆட்களை குறைந்த ஒப்பந்தக் கூலிகளாக கொண்டு வந்தனர். வாளுடன் வந்து வான் புகழ இருந்த தமிழர்கள் வாட்ட மனத் தமிழர்களாய் வாழ்வுக்காக அதே சுமத்ரா பூமியில் கூலிகளாக 1830 ஆம் ஆண்டு வந்து இறக்கப்பட்டனர். முகவர்கள் தமிழகத்தின் குக்கிராமங்களுக்கு சென்று படிப்பறிவு இல்லாத பாமர ஏழை மக்களிடம் டில்லிக்கு சென்றால் கொட்டிக்கிடக்கும் கோடிப் பொன்னை குறைவில்லமால் அள்ளிக் கொண்டு வரலாம் என்று தங்களது வருமானத்துக்காக கதைகள் அளந்து இருக்கிறார்கள். என்ன வேலை என்று வினவிய ஏதுமறியா மக்களிடம், ஒன்னும் கடினமான பணி அல்ல. சர்க்கரை எங்கும் கொட்டிக் கிடைக்கும். அவற்றை பறவைகள் வந்து தின்று விடாமல் காவல் காக்க வேண்டியது தான் பணி . வாரத்தில் 5 நாள் தான் வேலை, தங்குமிடம் இலவசம். சில அப்பாவிகளிடம் பணம் மரத்தில் காய்த்துக் கிடப்பதாகவும் சொன்னதும், சிந்திக்க கூட அவகாசம் எடுத்துக் கொள்ளமல் எங்கே நிற்கிறது கப்பல் என்று தனது வீட்டில் சொல்லிக்கொள்ளாமல் புறப்பட்ட ஏமாளிகளும் இதில் அடக்கம். ஆனால் கடுமையான கடற்பயணத்தைத் தாக்குப்பிடித்து அதில் வாந்தி, வயிற்றுப்போக்கு, கடல் நோய் இவற்றுக்கு தாக்குப்பிடித்து மிச்ச உயிரோடு லாபுஹான் டில்லி என்கின்ற சுமத்ராவிஹ்ன் டிலியல் இறங்கிய பிறகுதான் தாங்கள் மிக அழகான ஏமாற்றப் பட்டிருக்கிறோம் என்று அவர்கள் உணர்ந்தார்கள். தமிழர்கள் கூட்டமாக கொட்டடிகளில் தங்க வைக்கப்பட்டனர், தங்க வைக்கப்பட்டனர் என்று சொல்வதை விட அடைக்கப்பட்டனர் என்றே சொல்ல வேண்டும். வந்தவர்களில் பெரும்பாலோர் டச்சு காரர்களின் டில்லி மாட்ஸ்காப்பை புகையிலைத் தோட்டங்களில் கடுமையாக வேலை வேண்டியதாயிற்று . எங்கே தப்பித்து செல்ல முடியும்?
வட சுமத்திராவை சேர்ந்தவர்களை பொறுத்தவரை, இந்தியர்களை மூன்று வகையாக அழைத்து வந்தனர்.
பிரிட்டிஷ் இந்தியாவின் மூன்று ராஜதானிகள் ,
1.மதராஸ் ராஜதானி,
3.பெங்கால் ராஜதானி
2 .பம்பாய் ராஜதானி
'க்ளிங் ' என்றால் நமக்கே உரித்தான கரிய நிறம் கொண்ட தமிழர்கள்...கலிங்கம் என்ற பகுதியில் இருந்து முற்காலங்களில் தமிழர்களின் கப்பல்கள் புறப்பட்டதால் கலிங்க தேசத்தில் இருந்து வந்தவர்கள் என்ற வழக்கில் கலிங் என்பது மருவி க்ளிங் என்று ஆயிற்று.
அடுத்தது 'ஒராங் பெங்காலி '. பெங்கால் ராஜதானியில் இருந்து வந்தேறிய எந்த இனமும் சுமத்ராவினருக்கு ஓராங் பெங்காலி தான். அதாவது வங்காளி. இதில் பஞ்சாபி சிங்குகள் அதிகம்.
மூன்றாவதாக இனம் காணப்பட்டது , 'ஓராங் பம்பாய்'. அதாவது பம்பாய்க் காரன். அந்தக்காலத்திலேயே பம்பாய் வர்த்தக உலகில் அனைவராலும் வாணிப தலமாக அறியப்பட்டு இருந்தது. அந்த அடிப்படையிலே வணிக ரீதியில் வந்து சேர்ந்தோர் அவர்கள் பாரதத்தின் எந்தப்பகுதியில் இருந்து வந்து இருந்தாலும், 'ஓராங் பம்பாய்' தான்.
பிரித்தாளும் சூழ்ச்சியில் கை தேர்ந்த ஐரோப்பியரிடம், நமது தேசத்தில் நடந்தது போலவே, வட சுமத்ராவின் சுல்தான்கள் தங்களுக்குள் துளிர்விட்டு பொறாமைத்தீயை டச்சுக்காரர்களின் நட்பில் தணித்து கொள்ள, இத ... இதத்தானே எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன் னு கோழிய முழுங்கிய (விழுங்கிய) மாதிரி அப்படியே அந்தந்த பகுதிகள் முழுவதும் தாம் எடுத்து பொன் விளையும் பூமியா மாற்றி விடுவோம்னு கொஞ்சம் கொஞ்சமா தமது கைக்குள் வைத்து கொண்டார்கள் ...இப்படியாக சுமத்திராவின் வட பகுதி முழுவதும் ஐரோப்பிய செல்வந்தர்கள் முதலீடு செய்து தோட்டங்ககளை உருவாக்கினர் . டில்லி மாஸ்காப்பி என்ற நிறுவனத்தின் கீழ் இவை எல்லாம் செயல் பட்டன. தமிழ் கூலிகளின் வாழ்க்கையும் இவர்கள் பிடியில்.. கொஞ்ச நாளிலேயே, புகையிலையில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்ட ஆரம்பித்தது. பாவம் நம்ம ஆளுங்க தான் பிள்ளையார் பிடிக்க போய் குரங்கா முடிந்த கதையாக, சரி இது தான் நமது பூமி இனிமேல் என்று முழு மூச்சுடன் தம் வியர்வையை சிந்தி மண்ணைப் பொன் ஆக்கினார்கள் .
Reference Links
Revision History Last updated: Feb 15, 2026 22:08
-
(cur)23:27, Apr 04, 2026MUTHUMANI(42,538)pending [Tags: Current, Approved]
User Comments 0
Leave a Comment